கல்லெறிதல் - யுகபாரதி

சாலையைச்
செப்பனிடுவதற்காக
கொட்டப்பட்ட
மணலில்தான்
கோயில் கட்டி
விளையாடுவோம்.

கலசத்திற்கு
பதிலாக
ஒரு கொத்து
காட்டாமினுக்கை
நட்டு வைப்போம்.

நடுவிலொரு
குழி பிரித்து
உருண்டையாய்
களிமண்ணை
பிடித்து
கர்ப்பக் கிரகம்
அமைப்போம்.

காகிதப் பூவால்
அலங்கரித்து
கன்னத்தில்
போட்டுக் கொள்வோம்
சப்புக் கொட்டி.

எதன் பொருட்டாவது
கலைய நேரிடும்
மீண்டும் வந்து
பார்க்க

கலசத்தில்
பட்டிருக்கும்
நீரபிஷேகத்தில்
சற்றே
கரைந்திருக்கும்
அதன் உரு.
சோகத் தூவானமாய்
கண்கள் அரும்பும்.

கோயிலை சிதைத்த
நாயின் மீது
கல்விட்டெறிவர்
ஹமீதும், பீட்டரும்.